சனி, 2 ஏப்ரல், 2016

பெண்களின் கடைக்கண் பார்வை யார் மீது?

தமிழகத்தில் பெண்களின் அமோக ஆதரவை பெற்ற கட்சி அதிமுக என்னும் ஒரு பொது பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஓரளவு உண்மையும் உள்ளது. அவ்வாறு அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் பெண்கள் அதற்கான காரணங்களாக வெளிப்படும் மூன்று காரணங்களை அலசுவோம்.

எனக்கு கலைஞர் தாத்தாவை பிடிக்காது 

இந்த முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. 90 களுக்கு முன்பு பெரும்பாலான பெண்களின் பெற்றோர்களும் அவர்களின் தாத்தாக்களும் தங்களின் மகள் / பேத்தி யின் கல்வி என்பது நமக்கு பயன்படாத ஒன்று. ஏனென்றால் எப்படியும் திருமணத்திற்கு பின் அடுத்தவர் வீட்டில் வாழப்போகும் பெண்ணிற்கு ஏன் கல்வியைத்தர வேண்டும் என்று எண்ணிய போது இந்த கிழவன் அந்த பேத்திகளுக்கு கல்வியைகொடுக்க செய்த திருகு தாளம் தான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திட்டம். உண்மையில் இந்த கிழவன் திருமணத்திற்கு நிதி கொடுப்பதாக இருந்தால் அதை நேரடியாக கொடுத்திருக்கலாமே அதில் எதுக்கு கல்வி தகுதி? யாரை ஏய்க்க இந்த கல்வி தகுதி. இந்த பணத்தை பெறவேண்டிய காரணத்திற்காகவே பல பெண்கள் கல்விக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டனர். ஒருவேளை தங்களின் பெற்றோர்களை ஏமாற்றி தங்களை கல்விக்கூடத்திற்கு வரவழைத்தால் இந்த கிழவனை பிடிக்கவில்லையோ என்னவோ?
அதோடு விட்டாரா இந்த கிழவர். கல்வி கூடத்திற்கே அனுப்பபடாத பெண்களை, ஐந்தாம் வகுப்புவரை கற்பிக்கும் ஆரம்பப்பள்ளிகளுக்கு பெண்களை மட்டுமே நியமித்து வீட்டில் நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்த அவர்களின் வாழ்வில் நிம்மதியை தொலைத்தது மட்டும் அல்லாமல்  வேலைவாய்ப்பில் முன்னுரிமை, பேறுகால சம்பளத்துடன் விடுப்பு போன்ற தவறுகளை மீண்டும் மீண்டும் செய்ததால் ஒருவேளை பிடிக்கவில்லையோ?
சரி படித்த பெண்களைத்தான் நிம்மதியாக இருக்க விடவில்லை படிக்காத பெண்களையும் கணவனை மட்டும் சார்ந்து இருக்க விடாமல் சுயஉதவிக்குழுக்கள் மூலம் தன் சொந்தக்காலில் நிற்கவைத்த கொடுமைக்கார கிழவன். ஏன் பேறுகாலத்தில் வேலைக்கு செல்ல முடியாத போது கூட டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மூலம் பிரசவத்திற்கு முன்பு மூன்று மாதகாலமும் பின்பு மூன்று மாதமும் நிதிஉதவி கொடுத்து அவர்கள் யாரையும் சாராமல் இருக்க வைத்த கொடுமைக்காரர் அவர். இதுவும் ஒருகாரணமாக இருக்கலாம்
இதைவிட ஒரு மிக முக்கிய காரணம், உங்களின் பெற்றோர்களிடம் இருந்து சொத்தில் பங்கு பிரித்து கொடுக்கவைத்த பாவி என்பதால் ஒருவேளை பிடிக்காமல் போயிருக்கலாம்.

பெண் என்பதால் ஜெயலலிதாவை பிடிக்கும் 

இந்தக்காரணம் ஒருவேளை உண்மை என்று எடுத்துக்கொண்டாலும், மற்ற பெண்தலைவர்கள் எத்தனை பேரை உங்களுக்கு பிடிக்கும். உதாரணதிற்கு கனிமொழி, தமிழிசை, குஷ்பு போன்றவர்களை உங்களுக்கு பிடிக்குமா? நிச்சயம் இல்லை என்ற பதில் தான் கிடைக்கும். மேலும் பெண் என்பதை பாலினம் சார்ந்ததாக பார்க்காமல் பெண்ணியம் என்ற குணம் சார்ந்த பண்பாக பார்த்தால் ஜெயலலிதாவிடம் பெண்ணியத்தின் கூறுகளை பார்த்ததுண்டா நீங்கள்? அந்த பெண்ணியத்தில் தான் சந்திரலேகா என்ற அதிகாரியின் மீது அமிலம் வீச்சு,  சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி வன்கொடுமை போன்ற நற்காரியங்களும் வருகிறதோ என்னவோ? நீங்கள் நினைத்த ஜெயலலிதா என்ற பெண்மணி இத்தகைய நற்குணங்களை கொண்டவர் என்று நீங்கள் அறிந்துதான் உங்களுக்கு பிடிக்குமா?

அதிமுக ஆட்சியில் கட்சிக்காரர்கள் அராஜகம் செய்யமாட்டார்கள் 

இதுவும் எவ்வளவு தூரம் சரி என்று எனக்கு தெரியாது ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட அளவுகடந்த அதிகாரம் எத்தனை பெண்களின் வாழக்கையை சிதைத்தது என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. 90களில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் தொடங்கி சமீபத்திய சிவகங்கை பெண் சீரழிப்பு வரை ஜெயாவின் காவல் துறை நடத்திய அட்டூழியங்களுக்கு அளவேயில்லை. இது இன்றுவரை தொடர்கிறது (ஜெயலலிதா ஆட்சியில்  காவல்துறைபோலீசு ஆட்சி) இந்த பதிவுகள் அதற்கு சாட்சி. மேலும் அரசியல்வாதிகள் அராஜகம் செய்தால் அவர்கள் மீண்டும் மக்களை தேடி வந்துதான் ஆகவேண்டும் ஆனால் போலிசு அராஜகம் செய்யும் போது அவர்களை தண்டிக்க பொதுமக்களிடம் என்ன வழி உள்ளது?  கட்சிகார்களின் அராஜகம் வெளிப்படையாகத் தெரியும். காவல் துறை அராஜகம் வெளியே தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தால் என்ன நடக்கும் என்று விசாரணை படம் பார்த்த பலருக்கும் புரிந்திருக்கும் . நீங்கள் இப்படிப்பட்ட ஆட்சியைத்தான் விரும்புகிறீர்களா? உங்களின் மனசாட்சியை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள் 

செலவழித்த மணித்துளிகளுக்கு நன்றியுடன் - நடராசன் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக