ஞாயிறு, 13 மார்ச், 2016

இலவச மாயை



யாரால்?

தமிழகத்தில் சமீபகாலமாக பேசும் பொருளில் ஒன்று, அரசு தரும் சமூக நலத்திட்டங்களை (இலவச திட்டங்களை) பழிப்பது. இது ஒரு நாகரிகமாக இன்று பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதொடர்பு தளங்களில் மத்தியதர வர்க்கத்தினாரால் இந்த திட்டங்கள் பெரும் கேலிப்பொருளாக சித்தரிக்கப்படுகிறது. இந்த மனநிலையை அறிந்த சமூக ஆர்வலர்கள் பலரும், சில சமூக நல இயக்கங்களும் இந்த சமூக நலத்திட்டங்களை கையூட்டுக்கு இணையாக வர்ணிக்கிறார்கள். இந்த திட்டங்களை அரசியல் கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுப்பதை போன்று இதையும் சமதளத்தில் வைத்து விமர்சனம் வைக்கிறார்கள். அதிலுள்ள உண்மைதான் என்ன? வாருங்கள் பயணிக்கலாம்.

சமூக நலத்திட்டங்கள் இலவசமா?

இலவசம் என்பது யாரும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், தனக்கு சொந்தமான ஒரு பொருளை பிறிதொருவருக்கு கொடுப்பதுதான் இலவசம். அந்தவகையில் ஒரு அரசு தன் மக்களிடம் இருந்து பெற்ற வருவாயில் ஒரு சிறுபகுதியை அந்த மக்களின் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் எதிர்பார்ப்பில் தொடங்கப்படும் திட்டங்கள் எப்படி இலவசங்கள் ஆகும்?

ஒருவர் வரிகட்ட அதை எடுத்து அடுத்தவருக்கு கொடுப்பது இலவசம் ஆகாதா?

இதுதான் பெரும்பான்மையான மத்திய/உயர்தர வர்க்கத்தினர் வைக்கும் பொதுவான கேள்வி. இதற்கு ஒரு எடுத்துக்காட்டின் மூலம் பதில் சொல்ல விளைகிறேன். அரசு ஊழியர்களில் நான்கு வகைப்பிரிவினர் இருக்கிறார்கள் (குரூப்  1 to குரூப் 4). இவர்கள் எல்லோரும் 8 மணி நேரம் வேலை செய்ய கடமைப்பட்டுள்ளார்கள். அப்படியானால் அனைவருக்கும் ஒரே ஊதியம் தானே அரசு வழங்கவேண்டும்? அதில் ஏன் சிலருக்கு லட்சங்களிலும் பலருக்கு ஆயிரங்களிலும் ஊதியம் வழங்கப்படுகிறது.  உதாரணதிற்கு மாவட்ட ஆட்சித்தலைவரும் அரசு ஊழியர்தான் அங்குள்ள துப்புரவு தொழிலாளியும் அரசு ஊழியர்தான்.இருவருக்கும் ஒரே விதமான ஊதியம் தான் வழங்கப்படுகிறதா? ஒருவேளை மாவட்ட ஆட்சித்தலைவரின் பனி கடுமையானது என்று நீங்கள் எண்ணக்கூடும் அப்படி என்னும் பட்சத்தில் துப்புரவு தொழிலாளியின் பனி எளிதானதா? அதை கடுமையான பணியை /செய்யும் ஆட்சித்தலைவரால் இந்த எளிதான பணியை செய்ய முடியுமா? முடியாதல்லவா? அதேபோல் தான் அனைவரின் பணியும் அடுத்தவர்களுக்கு கடுமையானதாகத்தான் இருக்கும். அப்படி இருக்கையில் ஒருவருக்கு லட்சத்திலும் ஒருவருக்கு ஆயிரத்திலும் ஊதியம் கொடுப்பது ஏமாற்று வேலைதானே? அதனால் தான் அவர்களை குப்பை அள்ளும்  வண்டியிலேயே ஏற்றி சென்னைக்கு கொண்டுவந்து துப்புரவு பணிகளை அரசாங்கமே மேற்கொள்ள வைத்தது.  அவர்களுக்கும் இவர்களைப்போல் லட்சக்கணக்கில் ஊதியமும் குளிர்சாதன பெட்டியில் பயணமும் ஏற்பாடு செய்யாதது ஏன்?  அப்பொழுது எல்லாம் நம் மத்தியதர வர்க்க அறச்சீற்றம் எங்கே போனது? சமூக ஆர்வலர்கள் எங்கே சென்றார்கள்? அவர்களுக்கும் இந்த சலுகைகள் எல்லாம் இருந்திருந்தால் அவர்களும் இந்த இலவசங்களுக்கு ஏங்கி தவித்திருக்க மாட்டார்கள். அவர்களும் நம் மத்திய தரவர்க்க குடும்பங்களைப்போல், அவர்களின் தேவையான தொலைக்காட்சி, கிரைண்டர், மிக்சி போன்றவற்றை அரசின் உதவி இல்லாமலே வாங்கி இருக்கமுடியும். அவரகளும் லட்சங்களில் ஊதியம் வாங்கிருந்தால் அதிலிருந்து வரி கட்டி இருப்பார்கள். அவர்களுக்கு ஊதியமே கொடுக்கப்படவேண்டிய ஊதியத்தில் சிறு விகிதமே வழங்கப்படுகிறது மீதியை அரசாங்கமே எடுத்துகொல்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவர்கள்தான் அவர்களுக்கே தெரியாமல் மிகப்பெரும் தொகையை   செலுத்துகிறார்கள். மேலே கூறியதுபோல் பல வழிகளில் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்ட அவர்களுக்கு அரசு வழங்கும் ஒரு சிறு நிவாரணம் தான் இந்த இலவசங்கள்.  

தனியார் நிறுவனத்தில் இரவுபகல் பாராமல் வேலை செய்து வரிகட்ட , அதில் இருந்து  இலவசம் கொடுப்பது நியாயம் இல்லை அல்லவா?

இதுவும் சிலர் கேட்கும் கேள்வி. உங்களுக்கு வரிகட்டும் அளவு ஊதியத்தை தருவதற்கு அந்த நிறுவனம் அரசாங்கத்திடம் இருந்து பெற்று அனுபவித்துகொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களும் காரணம். ஒவ்வொரு அரசும் வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அள்ளிஅள்ளி கொடுக்கும் தொகையும் சலுகைகளும் கணக்கிலடங்காதவை. அதில் ஒரு பகுதிதான் உங்களின் ஊதியமாக வழங்கப்படுகிறது. யாரோ சிலருக்கு வேலைவாய்ப்பு வழங்க, குப்பனும் சுப்பனும் தீப்பெட்டி முதல் உப்புவரை வரி கட்டியதை,  அரசாங்கம் மானியமாக வழங்கும் போது யாரும் கேள்வி கேட்பதில்லை.

சொந்தமாக தொழில்/விவசாயம் செய்து செலுத்தும் வரியை எப்படி கொடுக்கலாம்?

வேளாண்மைக்கும், தொழிலுக்கும் அரசாங்கங்கள் கொடுக்கும் மானியம் எல்லோருக்கும் தெரிந்ததே. அதே போல் தான் இலவச திட்டங்களும் 

கல்விக்கும், வேளாண்மைக்கும் மட்டும் இலவசம் என்பதைப்பற்றி ?

கல்வி மற்றும் வேளாண்மைக்கு மட்டும் அல்ல நலிவடைந்த எல்லா மக்களுக்கும் தேவையான உதவிகளை அரசு செய்யவேண்டும். 

உதாரணத்திற்கு ஐ.ஐ.டி, ஐ.ஐ,எம் போன்ற அரசு கல்வி நிலையங்களில் ஒவ்வொரு மாணவனுக்கும் பல லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்கிறது. அதில் படித்த பணக்கார மாணவர்களும் அந்த சலுகைகளை அனுபவிக்கிறார்களே அதை யாரும் கேவலமாக சொல்வதில்லையே, அப்படி அரசு செலவில் படித்து வெளிநாட்டில் சென்று நிரந்தரமாக குடியமர்பவருக்கு செய்யப்படும் கோடிக்கணக்கான ரூபாய்களால் ஏற்படும் நன்மையை விட இலவச திட்டங்களால் அந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் விளையும் நன்மைகள் மிக அதிகம். ஒருவேளை தன் தகுதியால் தான் அங்கு இடம் கிடைத்தது என்று வாதிடுபவர்களுக்கு, இலவசங்களுக்கான தகுதியாக அரசாங்கம்  நிர்ணயிப்பதை அவர்கள் பெற்றிருப்பதால் தான் அவர்களுக்கு இலவசங்கள் கிடைக்கிறது. எனவே அவர்களும் தகுதி உடையவர்கள் தான்

வேளாண்மைக்கு மட்டும் இலவசம் என்றால், நெசவாளிக்கு, மீனவனுக்கு, கட்டிட தொழிலாளிக்கு, விவசாய கூலிகளுக்கு ஏன் தரக்கூடாது?


தகுதி இல்லாதவர்களும் இலவசங்கள் பெறுவது பற்றி ? 

எந்த ஒரு திட்டத்திலும் தவறுகள் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. உதாரணத்திற்கு தொழில் மானியம் பெற்றுக்கொண்டு பலர் ஏமாற்றுகிறார்கள். தகுதியே இல்லாத ஒருவருக்கு வேலை கிடைக்கிறது , நுழைவுத்தேர்வை ஏமாற்றி கல்லூரிகளில் சேர்கிறார்கள் என்று பல குறைகளை கூறிக்கொண்டே போகலாம் அதற்காக தொழில் மானியத்தை ஒழிக்கவேண்டும், அரசு வேலைவாய்ப்பை தடை செய்யவேண்டும், பதவி உயர்வை தடை செய்யவேண்டும், கல்லூரிகளை தொடங்கக்கூடாது என்று யாரும் சொல்வதில்லை அது போலத்தான் இதுவும். அரசாங்கம் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  எனக்கு தெரிந்து பலரும் அரசாங்கத்தை ஏமாற்றி சலுகைகளை பெற்றுக்கொண்டு அதே அரசாங்கத்தை விமர்சிக்கவும் தவறுவதில்லை. உதாரணத்திற்கு கடந்த ஆட்சியின் போது இலவச வண்ண தொலைக்காட்சி கொடுத்தபோது என்னிடம் தொலைக்காட்சி இல்லை என்னும் உறுதிமொழியில் கையெழுத்திட்டு தான் வாங்கி உள்ளார்கள். அதில் எத்தனைபேர் நேர்மையாக பதில் சொல்லி வேண்டாம் என்று மறுத்தார்கள்? எனவே எனது வேண்டுகோள் என்பது நாமும் முடிந்த அளவு நேர்மையாக இருப்போம் அதன்மூலம் அரசாங்கத்தின் பலன் உரியபவர்களை சென்று சேர நாமும் உதவுவோம். 

நன்றி..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக