வியாழன், 31 மார்ச், 2016

கேள்வி - பதில்

கேள்வி 1: அரசியல் திறனாய்வாளர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் சிலரும் விவாதங்களின் பொழுது திமுக வை விட அதிமுக வின் வாக்கு விகிதம் சுமார் ஐந்து சதவீதம் அதிகம் இருக்கும் என்று சொல்கிறார்களே அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

கேள்வி 2: எப்பொழுதும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி அதிமுக, இரண்டாவது தான் திமுக என்றால் மறுப்பீர்களா? உதாரணம் 2006ல் திமுக ஆட்சியை பிடித்த போதும் அதிமுக வாங்கிய வாக்கு சதவீதம் அதிகமாக இருந்ததே.

பதில் : அரசியல் திறனாய்வாளர்களுக்கு மூத்த பத்திரிக்கையாளர்களுக்கும் பதிலளிக்கும் அளவு நான் பெரிய ஆள் இல்லை. இருந்த போதும்   எனக்கு தெரிந்த சில விவரங்களை கூறுகிறேன். பதிலை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
1989 : திமுக - 33.2%, அதிமுக(ஜா + ஜெ ) - 31.4%, திமுக ஆட்சி 
1991 : திமுக - 22.5%, அதிமுக- 44.4%, அதிமுக ஆட்சி
1996 : திமுக - 42.07%, அதிமுக- 21.47%, திமுக ஆட்சி
2001 : திமுக - 30.9%, அதிமுக- 31.4%, அதிமுக ஆட்சி
2006 : திமுக - 26.5%, அதிமுக- 32.6%, திமுக ஆட்சி
2011 : திமுக - 22.4%, அதிமுக- 38.4, அதிமுக ஆட்சி

கடந்த 25 ஆண்டுகளில் நடந்த இந்த தேர்தல்களில் திமுக 22.4% முதல் 42.07% வரை வாக்கு சதவீதம் வாங்கியுள்ளது. அதேபோல் அதிமுக 21.47% முதல் 44.4% வரை வாக்கு சதவீதம் வாங்கியுள்ளது. ஆனால் எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் அதிமுகவுக்கு 5% வாக்குகள் அதிகம் என்கிறார்கள் என்று விளங்கவில்லை.  

புதன், 30 மார்ச், 2016

மதிமுக : திராவிட(ர்) இயக்கங்களின் வரமா சாபமா?

திராவிட(ர்) இயக்கங்கள் :


இந்த சொல் கடந்த 100 ஆண்டு தமிழகத்தின் வரலாறு. தமிழகத்தின் ஒவ்வொரு முன்னேற்றமும் இந்த இயக்கங்களால் என்பது மறுக்க முடியாத உண்மை. நீதிக்கட்சி தொடங்கி இன்றைய லட்சிய திமுக வரை "திராவிட" என்கிற பெயரோடு தான் இயங்குகின்றன. அவைகளில் பல அரசியல் இயக்கங்கள். அரசியல் அதிகாரத்தை பெற்று அதன் மூலம் திராவிட கொள்கைகளை நிறைவேற்றுவது இவர்களின் இலக்கு. இதன் அடிப்படையில் பார்த்தால் திமுக, மதிமுக தவிர்த்து மற்ற கட்சிகள் பெயரில் மட்டுமே திராவிடத்தை வைத்துள்ளன. இதில் மதிமுக வை உண்மையான திராவிட இயக்கமாக  இணைய வெளிகளில் கருணாநிதி எதிர்ப்பாளர்களால் முன்னிறுத்தப்படுகிறது.  அப்படியெனில் மதிமுக திராவிட கொள்கைகளை எவ்வாறு முன்னெடுத்து செல்கிறது என்பதை சீர் தூக்கி பார்ப்போம்.


மதிமுக உருவான பின்னணி:


ராஜீவ் கொலைக்கு பின் நடந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை கண்ட திமுகவுக்கு அடுத்த பேரிடியாக இறங்கியது திமுகவில் இருந்து மதிமுக பிரிந்த சம்பவம். இது நடந்தது 1993 ல். அதற்கு காரணமாக கூறப்பட்டது நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசின் உளவுத்துறை ஜெயலலிதா தலைமையிலான தமிழக காவல்துறைக்கு அனுப்பிய கடிதமும் அதைதொடர்ந்து நடந்த சம்பவங்களும்.   இந்த சம்பவம் நடந்த போது வைகோ திமுக வின் மாநிலங்களவை உறுப்பினர். அதாவது 1978 முதல் 1996 வரை தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் திமுக வின் உறுப்பினராக இருந்தார். அப்படி தொடர்ச்சியாக மூன்றாவது முறை உறுப்பினராக இருந்த போது மாநிலத்திலும் திமுக ஆட்சி, மத்தியிலும் 1989 - 1991 வரை திமுக கூட்டணியின் வி.பி. சிங் தலைமையிலான அரசு பொறுப்பில் இருந்தது. திமுக வுக்கும் விடுதலைபுலிகளுக்கும் புரிதல் ஏதும் இல்லா காலம் அது. திமுக டெலோ வை ஆதரித்தது எம்ஜியார் இறந்த பிறகு விடுதலை புலிகளுக்கு ஆதரவாக அதிமுக இல்லாத சூழல்அதுஇந்த காலகட்டத்தில் தான் கள்ளத்தோணி ஏறி வைகோ, இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்தார். அந்த சந்திப்பு கருணாநிதிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரும் சவாலை ஏற்படுத்தியது அதற்கு காரணம் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஒரு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் அடுத்த நாட்டின் எல்லைக்குள் கள்ளத்தோணி ஏறி செல்வது அரசியல் ரீதியாக எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது வைகோ வுக்கு தெரியாதது வியப்பே. அவரின் பயணம் இறுதி வரை கமுக்கமாக வைக்கப்பட்டு அவர் வன்னி சென்றதும் தான் கருணாநிதிக்கே(தன் நெஞ்சுகுழியில் உயிரிருக்கும் வரை கருணாநிதி தான் எல்லாம் என்று சொன்ன வைகோ) தெரியவந்தது. இது அரசியல் எதிரிகளால் மிகப்பெரும் புயலை கிளப்பி விட்டது. இதே காலகட்டத்தில் தான் விடுதலைப்புலிகள் நிகழ்த்திய பத்மநாபா படுகொலை, இந்திய ராணுவத்தை கலைஞர் வரவேற்காமை, வைகோவின் கள்ளத்தோணி பயணம் இவை அனைத்தும் சுப்ரமணிய சாமி, ஜெயலலிதா, ராஜீவ் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்து ராஜீவ் ஆதரவுடன் ஆட்சி அமைத்த சந்திரசேகரால் 1991 ஆட்சி கலைக்கப்பட்டது. இதில் கலைஞரின் செயல்பாடான இந்திய ராணுவத்தை வரவேற்காமை, எம் மக்களை கொன்று குவித்த படை என் நாட்டு படையாகினும் அதை வரவேற்க போகமாட்டேன் என்று சூளுரைத்தது ஒரு நேர்வழி போராட்டம். மற்ற இரண்டும்?


கொலைக்குற்றம் சாட்டப்பட்ட பின்னணி:  

வைகோ திமுகவை விட்டு வெளியேறிய/விலக்கப்பட்ட போதுநான் உயிரினும் மேலாக நினைத்த கருணாநிதியே என்னை சந்தேகப்பட்டு விட்டார் என்பதே வைகோ வின் குற்றசாட்டு  .
கருணாநிதி சந்தேகப்பட்டாரா? இல்லையா என்பதற்கு போகுமுன், வைகோ சந்தேகப்படும்படி நடந்தாரா இல்லையா என்பதுதான் கேள்வி
1.  மூன்றாவது முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்து ஓராண்டு கூட நிறைவடையாத சூழ்நிலையில், தலைவருக்கு தெரியாமல் கள்ளத்தோணி ஏறி இலங்கை சென்று பிரபாகரனை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?(டெசோ மூலம் வசூலித்த பணத்தை வாங்க மறுத்து திமுகவை அவமான படுத்திய விடுதலைபுலிகளின் தலைவரை, அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவர் கட்சியின் தலைவருக்கு தெரியாமல் சந்திக்க சென்றது ஏன்) 
2. இந்த பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வைகோவுக்கு பாதுகாப்பு அளித்த விடுதலைப்புலிகள்  சிலர் மரணமடைந்தனர். இவ்வளவு அபாயகரமான பயணம் மேற்கொள்ளும் நிர்பந்தம் வைகோ வுக்கும், விடுதலை புலிகளுக்கும் ஏற்பட்டது ஏன்?
3.இந்த பயணம் முடிந்து ஓராண்டிற்குள் ராஜீவ் காந்தி கொலை தமிழகத்தில் நிகழ்ந்தது. அதற்கு ஒரு வருடம் முன் பத்மநாபா கொலை நடந்தது. இந்த இரண்டும் விடுதலை புலிகளால் நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
4. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின், அதிமுக வுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உறவு அறுபட்ட நிலையில் திமுக வுடனும் பழைய கசப்புகளால் உறவை புதுபிக்க முடிய வில்லை.  எனவே திமுக வின் தலைவராக நமக்கு வேண்டப்பட்டவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று விடுதலை புலிகள் நினைத்திருக்கலாம்அதற்கு சரியான சந்தர்ப்பமாக1991 தோல்வியால் துவண்டு இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக  கருதி இருக்கலாம்.  
5. 1990 கள்ளத்தோணி பயணத்திற்கு பின் வைகோ கருணாநிதியை சந்தித்து சமாதானம் செய்திருந்தாலும் தொடர்ச்சியான நடவடிக்கைகள், சந்தேகம் கொள்ள வைத்திருக்கும். அதுவும் கருணாநிதி போன்ற அரசியல் தலைவருக்கு (எதிர்ப்பையே வாழ்நாள் முழுதும் சந்தித்து கொண்டிருக்கும் ஒருவருக்கு) சந்தேகம் வந்திருந்தாலும் அது நியாயமே.
6. எச்சரிக்கையை வெளியிட்டது நரசிம்ம ராவ் தலைமைலான அரசு. அந்த அறிக்கையை கையளித்தது ஜெயலலிதா தலைமையிலான அரசு. அவர்கள் கருணாநிதி பாதுகாப்பு குறித்து பொய்யான அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
7. இந்த அறிக்கை கிடைத்தவுடன் அதற்கு பொதுக்குழுவில் விளக்கம் அளிக்கும் படி வைகோ விடம்  வேண்டுகோள் விடுக்கப்பட்டது ஆனால் அதை மறுத்து அவர் போட்டி பொதுக்குழுவை கூட்டினார், அறிவாலயத்தை கைப்பற்ற முயன்றார் இறுதியில் கட்சியை கைப்பற்ற முயன்று தோல்விஅடைந்தார். இறுதியாக மதிமுக வை உருவாக்கினார்.


மதிமுக உருவான புதிதில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதா?

இன்றும் பல மதிமுக மற்றும் அனுதாபிகள் சொல்வது என்ன வென்றால் மதிமுக உருவானவுடன் திமுக தொண்டர்கள் பெருமளவில் வெளியேறி மதிமுக வில் இணைந்ததாக பரப்புரைகள் சொல்வதுண்டு அது எந்த அளவில் உண்மை? மேற்கண்ட கூற்றுக்கு ஆதாரமாக அவர்கள் குறிப்பிடுவது மதிமுக உருவாகி சிறிது காலத்தில் நடந்த பெருந்துறை சட்டமன்ற இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்ததை கூறுவார்கள்[அதுவும் தவறாக "திமுக" வை பின்னுக்கு தள்ளி என்று]. ஆனால் அதே அன்று நடந்த மயிலாப்பூர்  சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மதிமுக போட்டியிட்டது. அதை பற்றி யாரும் எங்கும் பேச மாட்டார்கள். அதற்கு காரணம்
 1. மயிலாப்பூரில் மதிமுக வின் பொருளாளரான[வைகோ வுக்கு அடுத்த இடம், தாயகம் கட்டிடத்தை வழங்கிய] கலைப்புலி எஸ்.தாணு போட்டியிட்டு நான்காம் இடம் பெற்று[காங்கிரசுக்கு அடுத்த இடம் ] வைப்புத்தொகை இழந்தார்.
2. உண்மையில் திமுக தொண்டர்கள் மதிமுகவை ஏற்று கொண்டதாக இருந்தால் அன்று திமுக கோட்டையாக விளங்கிய சென்னையில் இரண்டாம் இடம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அங்கு திமுக சார்பில் போட்டியிட்ட ராமஜயம் இரண்டாம் இடத்தை பெற்று  வைப்புத்தொகை திரும்ப பெற்றார். இதிலிருந்தே மதிமுக வினர் செய்வது பொய் பிரச்சாரம் என்று தெரியும்(2009 க்கு பின் அரசியல் தெரிந்தவர்கள் வேண்டுமானால் இதை ஏற்று கொள்ளலாம்).
3. சரி பெருந்துறையில்(பெருந்துறை தொகுதியின் வாக்காளன் நான். 1996 முதல் 2011 வரை அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்தவன் - 2004, 2009 தவிர) ஏன் இரண்டாம் இடம் பெற்றது என்பதையும் ஆராய்ந்து விடுவோம்


1. பெருந்துறையில் திமுக போட்டியிடவில்லை, 1991 பொதுத்தேர்தலில் .கம்யுனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதே .கம்யுனிஸ்ட் திமுக கூட்டணியில் தொடர்ந்ததால் கூட்டணி தர்ம அடிப்படையில் திமுக  ஆதரவுடன் .கம்யுனிஸ்ட் மீண்டும் போட்டியிட்டது. 1991 தேர்தலில் .கம்யுனிஸ்ட் பெற்ற வாக்குகள் சுமார் 22000. 1994 தேர்தலில் சுமார் 21000. மதிமுக சுமார் 25000.
2. மதிமுக பிளவுக்கு பின் திமுக வின் வாக்கு வங்கியில் சிறிது குறைந்தது உண்மை. அதற்கு காரணம்ஈரோடு திமுகவின் முகவரி போல்  விளங்கிய கணேசமூர்த்தி வைகோ வுடன் விலகிய 9 மாவட்ட செயலாளர்களுள் ஒருவர்.  அப்போது ஈரோடு திமுக வின் இரண்டாம் கட்ட தலைவர் என்று யாரும் செல்வாக்கு பெறவில்லை. சுப்புலட்சுமி ஜெகதீசன் சுமார் 1.5 ஆண்டு தடா சிறைவாசத்திற்கு பின் அப்போதுதான் வெளியே வந்திருந்தார். NKK.பெரியசாமி பெரிய அளவில் தொண்டர்களுடன் செல்வாக்கு பெற்று இருக்கவில்லை. எனவே அவர்களால் தொண்டர்களை ஒருங்கிணைத்து தேர்தல் பரப்புரை செய்ய இயலவில்லை. இருந்தபோதும் கணிசமான திமுக தொண்டர்கள் .கம்யுனிஸ்ட்  கட்சிக்கு வாக்களித்ததால் டெபொசிட் இழக்கவில்லை.
3. பெருந்துறை திமுக தொண்டர்களுக்கு எப்பொழுதும் தலைமை
மேல் சிறு வருத்தம்  உண்டு அது என்னவென்றால் எப்போதும் அந்த தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விடுவதால். அதனால் சிலர் மதிமுக வுக்கு சென்று விட்டு 1996ல்  மீண்டும் திரும்பி விட்டனர். 1994 ல் மதிமுக வாங்கிய வாக்குகளில் பெரும்பான்மையானவை தேர்தலுக்கு தேர்தல் மாற்றி வாக்களிப்பவர்கள். எனவே தான் 1994 ல், 25000 வாக்குகள் வாங்கிய மதிமுகவின் VM.கந்தசாமி, 1996 ல்  7800 வாக்குகள் பெற்றார்.
எனவே மதிமுகவை திமுக தொண்டர்கள் என்றைக்கும் திமுக தலைமைக்கு மாற்றாக கருதியதில்லை.
சரி, இப்பொழுது  மதிமுக அரசியல் கட்சியாக எப்படி நடைபோட்டு வந்துள்ளது என்பதை பார்ப்போம்.
மதிமுக தொடங்கியதுடன் அரசியல் முகப்பு வாக்கியமாக சொன்னது 
"அரசியலில் நேர்மை! பொதுவாழ்வில் தூய்மை! லட்சியத்தில் உறுதி!" இந்த வாக்கியங்களைத்தான். உண்மையாகவே அவர்கள் இதை கடைபிடிக்கிறார்களா?

அரசியலில் நேர்மை:

    இவ்வாறு சொன்ன அரசியல் கட்சி தான் 1995 ஆம் ஆண்டு ஊழல் மலிந்துவிட்டது என்று தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொண்டது. அதே கட்சி தான் மூன்றே ஆண்டுகளில் அதிமுகவுடன் 1998ல்  கூட்டணி வைத்தது. இதே போல் தான் இரண்டாம் முறையும் பாசிச ஜெயலலிதா ஆட்சி ஒழிக என்று கூக்குரல் இட்டுவிட்டு 2001-2006 ஆட்சி முடிய சில மாதங்கள் முன்புவரை அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப என்று கூறி மீண்டும் ஒருமுறை நடைபயணம் செய்த கட்சி 35 சீட்டுகள் கொடுக்கிறேன் என்று சொன்னதும் அன்பு சகோதரியின் ஆட்சி தொடர அதிமுக வுக்கு வாக்களியுங்கள் என்று சொன்ன நேர்மைக்கு சொந்தக்கார கட்சி.
2006 பிப்ரவரி வரை கலைஞர் 5 வது முறையாக பொறுப்பேற்க பாடுபடுவோம் என்று கூறிவிட்டு 2006 மார்ச்சில் சகோதரியின் ஆட்சி தொடர மதிமுக அயராது பாடுபடும் என்று அறிவித்த  நேர்மை மிக்க மிக்க கட்சி   
அது மட்டுமா கொலைப்பழி சுமத்தினார் என்று திமுக வை விட்டு வெளியேறி பின் 1999 மற்றும் 2004 இல் அதே கட்சி தலைமையில் இடம் பெற்ற கூட்டணியில் இடம்பெற்றதுடன் என் தொண்டைக்குழியில் உயிர் இருக்கும் வரை கலைஞரை எதிர்க்க மாட்டேன் என்று அறிவித்து அதன் படியே (?) இன்று வரி நடக்கும் நேர்மையான தலைவரை கொண்ட கட்சி அது.
இதுபோல் இன்னும் பல உதாரணங்கள் கட்சியின் நேர்மையை பாராட்டும்

அடுத்தது 'பொதுவாழ்வில் தூய்மை':

புலிகளிடமும்புலம் பெயர் தமிழர்களிடமும் பணம் பெற்றுக்கொண்டு கட்சி நடத்துவதாக சர்வதேச ஊடகமே தூய்மையை பற்றி பறைசாற்றியது. அது மட்டும் அல்ல உள்ளூர் ஊடகங்களும் 40 கோடியும்,35 சீட்டும் வாங்கிகொண்டு அணி மாறியது முதல் விகடனில் வெளியான புனிதவதி பேட்டி, நாஞ்சில் சம்பத் வெளியேறிய பின் அவர் கூறிய எந்த எந்த குற்றசாட்டுக்கும் பதில் அளிக்காமல் நடந்த நிகழ்வுகளை  மறப்போம் என்று கூறிய தூய்மையான கட்சி தான் மதிமுக
அடுத்தது 'லட்சியத்தில் உறுதி':
இதற்கும் பல உதாரணங்கள் உண்டு. அம்மையாரின் அடக்குமுறைக்கு பயந்து கொண்டு புலிகளுக்கும் மதிமுக வுக்கும் தொடர்பில்லை, புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு மதிமுக வில் இடம்  இல்லை என்ற ஈழ ஆதரவு நிலையில் உறுதியாய் இருந்த கட்சி அது
அதே போல் தான் திமுக, அதிமுக வுடன் கூட்டு இல்லை என்ற இலட்சியத்திலும், பாஜக வுக்கு வெண்சாமரம் வீசி திராவிட கொள்கைகளை காப்பாற்றும் லட்சியத்தில் உறுதி கொண்ட கட்சி
அது மட்டும் அல்ல சேது சமுத்திரம், கூடங்குளம் என அனைத்து பிரச்சினைகளிலும் அம்மையர் இவர்களுக்கு எதிராக களம் இறங்கும் வரை லட்சிய உறுதியோடு இருக்கும் கட்சி தான் மதிமுக   
என் சிற்றறிவுக்கு எட்டியவரை மதிமுக என்ற கட்சி எந்த வகையிலும் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளை விட வேறுபட்டதாக தெரிய வில்லை. மேலும் இந்த கட்சி திராவிட இயக்க கொள்கைகளை எந்த வகையிலும் பரப்பவில்லை அதை அழிக்கும் சக்திகளுக்கு கருணாநிதி எதிர்ப்பு என்ற ஒற்றை கொள்கைக்காக துணை போகும் இயக்கமாக தான் தெரிகிறது.
எனவே  என்னைப்பொருத்தவரை மதிமுக, திராவிட இயக்கத்தின் சாபமே.