சனி, 14 மே, 2016

அன்பான அடக்குமுறை

தெண்ட கருமாந்திரம், முட்டா பயல்கள், வேறு கட்சிக்கு ஓட்டு போட்டால் கையில் குஷ்டம் வரும், பெண்களை கற்பழிப்பேன், கஞ்சா வைத்து கைது செய்வேன், ஒரு தலைவரை ஆதரித்ததற்கு அவரின் வீட்டின் முன்னாலேயே கொலை செய்வேன், இழிபிறவிகள், போடா லூசு, ஈன பிறவிகள், வல்லுறவு, மான பங்கம், ........, இன்னும் அச்சில் ஏற்ற முடியாத பல சொற்கள் பேசப்படும் ஒரு மேடை, தமிழகத்தின் மாற்று அரசியல் / எதிர்கால நம்பிக்கை என்று படித்த பலராலும் நம்பப்படுகிறது. அந்த தலைவர் வெளிட்டிருக்கும் "செயற்பாட்டு வரைவு திட்டம்(தேர்தல் அறிக்கை அல்ல என்று அவர்களே சொல்லி இருக்கிறார்கள்) ". இதை சொல்லி பல இளைஞர்கள் அந்த கட்சியின் பின்னும் திரள தயாராக இருக்கிறார்கள். அந்த திட்டத்தை அவர்களே "அன்பான சர்வாதிகாரம் " என்கிறார்கள். மக்களாட்சியில் நம்பிக்கை இல்லாத தலைவர்களுக்கு தான் அடக்குமுறையில் நம்பிக்கை இருக்கும். அதனால் தானோ என்னவோ யூதர்கள் என்பதற்காக கோடிக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த ஹிட்லரை தங்களின் தலைவராக ஏற்றுக்கொண்டு "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று நம் முன்னோர் கடைபிடித்த கொள்கையை கடைபிடிக்கிறேன் என்று சொல்வது சிந்திக்க மறுப்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் சிந்திக்க தெரிந்தவர்கள்? சரி அதை விட்டுவிட்டு அவர்கள் எழுதிய விஜய் அவர்களை வைத்து இயக்குவதாக சிந்தித்திருந்த முதல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் (அது தான் செயற்பாட்டு வரைவு திட்டம்) எப்படி என்று பார்ப்போம்.

1.ஐந்து தலைநகரங்கள்: வரலாறு படித்தவர்களுக்கு முகம்மது பின் துக்ளக் ஆட்சிக்காலத்தில் தலைநகரை மாற்ற நடந்த கோமாளி தனங்களால் மக்களுக்கு ஏற்றப்பட்ட கடுமையான பாதிப்பு பற்றி தெரியும். அதேபோல் MGR என்ற புனிதர் நிகழ்த்த முயன்ற சமீபத்திய தலைநகர் மாற்றமும் அதனால் ஏற்பட்ட விளைவுகளால் அதை அவர் கைவிட்டதும் தெரியும். சரி வரலாறு தெரியாமல் நிகழ்காலம் மட்டுமே தெரிந்தால் கூட இந்த அறிவிப்பு எவ்வளவு கேலிக்கூத்து என்பது தெரியும். மொத்தம் 28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பியன் பார்லிமென்ட் Brussels மற்றும் strasbourg என்ற இரண்டு இடங்களில் உள்ளது. வளர்ந்த 28 நாடுகளை கொண்ட ஐரோப்பியன் பார்லிமென்ட் இரண்டு தலைநகரங்களை சமாளிக்க முடியாமல் திணறும் போது  தமிழகத்தில் 5 தலை நகரங்கள் என்பது எவ்வளவு கேலிக்கூத்து?

2.மேம்பாலங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும். இதற்கு நான் விமர்சனம் செய்ய தேவை இல்லை. உங்களுக்கே தெரியும் 

3. இயற்கை வேளாண்மை மட்டும் அனுமதிக்கப்படும். பசுமை புரட்சிக்கு முன்னர் விவசாயிகள் இயற்கை வேளாண்மையை மட்டுமே இந்தியாவில் செயல்படுத்தி வந்தார்கள். அப்பொழுது மக்கள் தொகையும் குறைவு, 90% வேளாண்மை மட்டுமே செய்து வந்தார்கள். அப்படி இருந்தும் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடியது. அவுன்ஸ் அரிசிக்காலம் என்றால் என்ன என்று உங்கள் வீடு பெரியவர்களை கேளுங்கள் உண்மை விளங்கும். இயற்கை வேளாண்மை என்பது வரவேற்க தக்கது ஆனால் மற்ற வேளாண்மை முறையை தடை செய்வது மிகப்பெரும் அழிவுக்கு இட்டுசெல்லும். அதனால் தான் திமுக வும் கூடதனது தேர்தல் அறிக்கையில் நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளது 

4. ஐயா வீரப்பனாருக்கு நினைவகம் கட்டப்படும் . இதற்கு நான் எதாவது விளக்கம் சொல்ல வேண்டுமா என்ன?

5. பனங்கள்ளும் தென்னங்கள்ளும் விற்க படும். உங்கள் வீட்டு பெரியவர்களிடம் கேட்டுப்பாருங்கள்,கல் குடித்தால் அவர்கள் குடிகாரர்கள் இல்லையா அவர்கள் குடிபோதையில் ஏதும் தவறு செய்ய மாட்டார்களா என்று?

இதே போல் பல பொய்யான வாக்குறுதிகளை போகிற போக்கில் அள்ளித்தெளித்த ஆவணம் தான் அது. இந்த வாக்குறுதிகளை படித்த இளைஞர்கள் பலரும் நம்புவதுதான் அதைவிட சோகம்.

இன்னும் பல பொய்கள். உதாரணதிற்கு சில 
1. மெக்கலே கல்வி திட்டம் ஒழிக்கப்படும். அது ஏற்கனவே ஒழிக்கப்பட்டு சமச்சீர்கல்வி மூலம் செயல்பட்டு அடிப்படை கல்வி நடைமுறைப்படுத்தபடுகிறது 

2. கல்வியும், மருத்துவமும் இலவசம். கல்வி ஏற்கனவே இலவசமாகத்தான் உள்ளது. அரசு பள்ளிகளில் மட்டும் அல்ல அனைத்து தனியார் பள்ளிகளிலும் RTE (கல்விக்கான உரிமை சட்டம் ) 25%  இடங்கள் ஒதுக்கபடுகிறது. மேலும் திமுக ஆட்சிக்காலத்தில் கல்விக்கு என்று இரண்டு பேராசிரியர்கள் (உயர்கல்வி, பள்ளி கல்வி )அமைச்சர்கள் பணி ஆற்றினார்கள். அதே போல் முதல்தலைமுறை பட்டதாரிகள் படிக்கும் எந்த படிப்பிற்கும் (பொறியியல், மருத்துவம்) எந்த கல்லூரி ஆயினும் அரசே அவர்களின் கல்வி செலவை ஏற்றுக்கொண்டுள்ளது. அதே போல் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளில் இலவச மருத்துவம் அளிக்கபடுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமான மருத்துவம் அளிக்க படுகிறது 

3. பண்ணை முறையில் விவசாயம் செய்யப்படும். அதாவது அரை ஏக்கர் ஒரு ஏக்கர் வைத்துள்ள விவசாயியிடம் இருந்து பிடுங்கி 2000, 3000 ஏக்கரில் பழ பண்ணைகள் அமைக்கப்படும். அந்த ஏழை விவசாயி தனக்கு தேவையான காய்கறிகளை கடைகளில் தான் வாங்கிக்கொள்ள முடியும். தன் நிலத்தில் தான் நினைத்ததை விளைவிக்க முடியாமல் அரசாங்கம் பிடுங்கி கொள்வதுதான் அன்பான சர்வாதிகாரமாம். இந்த பண்ணை முறை விவசாயம் என்பது பெருமுதலாளிகள் பயன்படுத்தும் யுக்தி. அதை தான் முன்னிருத்துகிறார்கள்.

சரி இவர்களின் வாக்குறுதிகள் தான் இப்படி, இவர்களின் செயல்பாடுகள்?
பொய்யை மட்டுமே பேசும் தலைவர். உதாரணம், 
MGR பதவி ஏற்பில் பெரியார் கலந்து கொண்டதாக  சொன்னது, 
ஏன் பெரியாரை உங்கள் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற போது பெரியாருக்கு பெரியாராக உள்ள அயோத்தி தாசரை போட்டுள்ளேன். பெரியார் என்பவர் திராவிடம் என்பதின் அடையாளமாக உள்ளார் அதனால் போட வில்லை என்பவர் திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் (பெரியாருக்கு முன்னர்) பயன்படுத்தியவர் அயோத்தி தாசர் என்பதை மறைப்பது 
கடவுள் மறுப்பை மேடை தோறும் முழங்கிவிட்டு இன்று முருகனுக்கு காவடி எடுப்பதும், கிறிஸ்துவ பேராயர் அவர்களிடம் நான் பேசியதை கருணாநிதியும் வீரமணியும் திரித்து விட்டார்கள் என்று மாற்றி பேசுவதும் தொடர்கதை ஆகிவிட்டது 
இந்தியாவிலயே தமிழ் நாட்டில் மட்டும் தான் பெயரை வைத்து யார் என்ன சாதி என்று சொல்ல இயலாது. அதனால் தான் தமிழர்களின் தனித்தன்மை போய்விட்டது . சாதியை பெயருக்கு பின் சேர்த்துக்கொண்டு சாதிய அரசியல் மீட்டெடுக்க பட வேண்டுமாம். ஏனென்றால் அப்பொழுது தான் யார் தமிழன் என்று கண்டு பிடிக்கமுடியுமாம். 
கல்விக்கொள்ளையர்களும், மணல் கொள்ளையர்களும் இடும் சல்லி காசுக்கு பெருந்தமிழர் என்று பாராட்டுரை வேறு. கனிம வளங்களை சுரண்டும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்களே ஏன் என்றால், குடியரசுத்தலைவர் விருது கொடுத்துள்ளார்கள் அதனால் தான் என்கிறார்கள். அவர்கள் கொடுத்த அனுமதி என்பது அனுமதிக்கப்பட்ட அளவில் மணலை எடுக்க தான். ஆனால் கொள்ளை அடித்துவிட்டு வழக்கு வந்தாலும்  அவர்களை காசுக்காக ஆதரிக்கும் இவர்தான் சுற்றுச்சூழலை பாது காப்பாராம்

கத்தி பட சர்ச்சை வந்தபோது ராஜபக்சே வின் பினாமி நிறுவனம் லைக்கா என்று மற்ற தமிழ் அமைப்புகள் போராடிய போது லைக்கா நிறுவனத்திற்காக ஆதரவாக களம் இறங்கியவர் தான் நம் சீமான்.

தன் சொந்த திருமணத்தில் எத்தனை ஏமாற்று வேலை. ஈழத்தில் வாழும் கைம்பெண் ஒருவரை தான் திருமணம் செய்வேன் என்று கூறிவிட்டு பின் காளிமுத்துவின் கயல்விழியை திருமணம் செய்தார். ஒருவேளை ஈழத்தில் எந்த கைம்பெண்ணும் இல்லையோ?

சரி இவரின் அரசியல் உறுதிதான் எப்படிப்பட்டது. காங்கிரசுக்கு ஆதரவு, திமுகவுக்கு ஆதரவு, மதிமுக வுக்கு ஆதரவு, சிவ சேனாவுக்கு ஆதரவு, அதிமுகவுக்கு ஆதரவு, இறுதியாக தனிக்கட்சி...

கட்சி தொடங்கி முதல் தேர்தலிலேயே அனைத்து தொகுதிகளிலும் போட்டிடும் வலிமை எப்படி கிடைத்தது. அது புலம்பெயர் தமிழர்கள் அனுப்பும் யுரோ மற்றும் டாலர் களில் கிடைக்கிறது.  அந்த பணம் தான் 60 லட்ச ரூபாய் காராகவும் துப்பாக்கி ஏந்திய தனி பாதுகாப்பு படையாகவும் தமிழகத்தில் மறுஉருவம் பெறுகிறது. பக்கத்துக்கு மாநிலத்தில் முதல்வரை மிஸ்டர் உம்மன்சாண்டி என்று ஒரு சிறுமி அழைக்கிறார். இதுவரை ஒரு கவுன்சிலராக கூட பதவியில் இருந்திராத சீமானுக்கு 4 நபர்கள் கொண்ட துப்பாக்கி ஏந்திய தனி பாதுகாப்பு படை, 60 லட்ச ரூபாய் கார். இவர்கள் தாம் மாற்று அரசியலின் தன்னிகரில்லா தளபதிகள். தமிழ் தமிழ் என்று ஊர் ஊருக்கு பேசிவிட்டு தன் செயற்பாட்டு வரைவு திட்டத்தை கோயிலில் வைத்து சம்ஸ்கிருத அர்ச்சனை செய்த கொள்கையாளர்.

இறுதியாக ஒன்று, பொதுவாக தூய தமிழ் மேல் எனக்கு தனி காதலே உண்டு. மணிப்பிரவாள நடையில் இருந்த கொஞ்சும் தமிழில் மேடைப்பேச்சில் "மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களை தழுவுவதோ நித்திரை மறவாது இடுவீர் எமக்கு இடுவீர் முத்திரை " மறுமலர்ச்சி அடைந்த தமிழ் இன்று சீமானின் மேடையில் ஆபாசமாக, வன்முறை தமிழாக காதில் கேட்பதற்கே நாராசமாய் விழுகிறது. தமிழ் என்றாலே இனிமை என்று தான் நினைத்திருந்தேன். அந்த தூய தமிழும் இவ்வளவு கேவலமாக பேச முடியும் என்ற ஒரு நிலைக்கு கொண்டு சேர்த்த பெருமைக்காரர் இவர்.

வாக்களிக்கும் முன் ஒன்று :  புலம்பெயர் தமிழர்கள் அளித்த வெளிநாட்டு பணம் செய்த செயல் என்ன தெரியுமா? போர் நிறுத்தத்தில் இருந்த இலங்கையில் விடுதலைப்புலிகள் மாவிலாறில் தண்ணீரை தடை செய்து போர்நிறுத்தத்தை முறிக்க செய்தது. அந்த பணம் செய்த வேலை இறுதியில் இன அழிப்பில் முடித்து வைத்தது. எனவே மீண்டும் ஒரு முறை  வெளிநாட்டு பணம் செய்யும் வேலையால் தாய் தமிழகத்திலும் இன அழிப்பை நிகழ்த்தி விடப்போகிறது.  இந்திய இறையாண்மை என்றால் என்ன என்று மேடைக்கு மேடை முஷ்டி உயர்த்தி இளைஞர்களின் உணர்ச்சியை தூண்டிவிட்ட சீமான் அதே தலைவன் கட்சி ஆரம்பிக்கும் போது இந்திய இறையாண்மைக்கு குந்தகம் வராமல் கட்சி நடத்துவேன் என்று கட்சியை பதிந்த ஏமாற்றுக்காரர் அவர்களுக்கு உங்கள் ஆதரவை தரப்போகிறீர்களா? மாற்றம் வேண்டும் என்று 2011 ல் ஜெயாவுக்கும் 2014ல் மோடிக்கு வாக்களித்து இருமுறை ஏமாந்த நீங்கள் முன்றாம் முறையும் ஏமாளி ஆகப்போகிரீர்களா? அது மே 16 அன்று உங்கள் கையில் 








சனி, 2 ஏப்ரல், 2016

பெண்களின் கடைக்கண் பார்வை யார் மீது?

தமிழகத்தில் பெண்களின் அமோக ஆதரவை பெற்ற கட்சி அதிமுக என்னும் ஒரு பொது பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஓரளவு உண்மையும் உள்ளது. அவ்வாறு அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் பெண்கள் அதற்கான காரணங்களாக வெளிப்படும் மூன்று காரணங்களை அலசுவோம்.

எனக்கு கலைஞர் தாத்தாவை பிடிக்காது 

இந்த முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. 90 களுக்கு முன்பு பெரும்பாலான பெண்களின் பெற்றோர்களும் அவர்களின் தாத்தாக்களும் தங்களின் மகள் / பேத்தி யின் கல்வி என்பது நமக்கு பயன்படாத ஒன்று. ஏனென்றால் எப்படியும் திருமணத்திற்கு பின் அடுத்தவர் வீட்டில் வாழப்போகும் பெண்ணிற்கு ஏன் கல்வியைத்தர வேண்டும் என்று எண்ணிய போது இந்த கிழவன் அந்த பேத்திகளுக்கு கல்வியைகொடுக்க செய்த திருகு தாளம் தான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திட்டம். உண்மையில் இந்த கிழவன் திருமணத்திற்கு நிதி கொடுப்பதாக இருந்தால் அதை நேரடியாக கொடுத்திருக்கலாமே அதில் எதுக்கு கல்வி தகுதி? யாரை ஏய்க்க இந்த கல்வி தகுதி. இந்த பணத்தை பெறவேண்டிய காரணத்திற்காகவே பல பெண்கள் கல்விக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டனர். ஒருவேளை தங்களின் பெற்றோர்களை ஏமாற்றி தங்களை கல்விக்கூடத்திற்கு வரவழைத்தால் இந்த கிழவனை பிடிக்கவில்லையோ என்னவோ?
அதோடு விட்டாரா இந்த கிழவர். கல்வி கூடத்திற்கே அனுப்பபடாத பெண்களை, ஐந்தாம் வகுப்புவரை கற்பிக்கும் ஆரம்பப்பள்ளிகளுக்கு பெண்களை மட்டுமே நியமித்து வீட்டில் நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்த அவர்களின் வாழ்வில் நிம்மதியை தொலைத்தது மட்டும் அல்லாமல்  வேலைவாய்ப்பில் முன்னுரிமை, பேறுகால சம்பளத்துடன் விடுப்பு போன்ற தவறுகளை மீண்டும் மீண்டும் செய்ததால் ஒருவேளை பிடிக்கவில்லையோ?
சரி படித்த பெண்களைத்தான் நிம்மதியாக இருக்க விடவில்லை படிக்காத பெண்களையும் கணவனை மட்டும் சார்ந்து இருக்க விடாமல் சுயஉதவிக்குழுக்கள் மூலம் தன் சொந்தக்காலில் நிற்கவைத்த கொடுமைக்கார கிழவன். ஏன் பேறுகாலத்தில் வேலைக்கு செல்ல முடியாத போது கூட டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மூலம் பிரசவத்திற்கு முன்பு மூன்று மாதகாலமும் பின்பு மூன்று மாதமும் நிதிஉதவி கொடுத்து அவர்கள் யாரையும் சாராமல் இருக்க வைத்த கொடுமைக்காரர் அவர். இதுவும் ஒருகாரணமாக இருக்கலாம்
இதைவிட ஒரு மிக முக்கிய காரணம், உங்களின் பெற்றோர்களிடம் இருந்து சொத்தில் பங்கு பிரித்து கொடுக்கவைத்த பாவி என்பதால் ஒருவேளை பிடிக்காமல் போயிருக்கலாம்.

பெண் என்பதால் ஜெயலலிதாவை பிடிக்கும் 

இந்தக்காரணம் ஒருவேளை உண்மை என்று எடுத்துக்கொண்டாலும், மற்ற பெண்தலைவர்கள் எத்தனை பேரை உங்களுக்கு பிடிக்கும். உதாரணதிற்கு கனிமொழி, தமிழிசை, குஷ்பு போன்றவர்களை உங்களுக்கு பிடிக்குமா? நிச்சயம் இல்லை என்ற பதில் தான் கிடைக்கும். மேலும் பெண் என்பதை பாலினம் சார்ந்ததாக பார்க்காமல் பெண்ணியம் என்ற குணம் சார்ந்த பண்பாக பார்த்தால் ஜெயலலிதாவிடம் பெண்ணியத்தின் கூறுகளை பார்த்ததுண்டா நீங்கள்? அந்த பெண்ணியத்தில் தான் சந்திரலேகா என்ற அதிகாரியின் மீது அமிலம் வீச்சு,  சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி வன்கொடுமை போன்ற நற்காரியங்களும் வருகிறதோ என்னவோ? நீங்கள் நினைத்த ஜெயலலிதா என்ற பெண்மணி இத்தகைய நற்குணங்களை கொண்டவர் என்று நீங்கள் அறிந்துதான் உங்களுக்கு பிடிக்குமா?

அதிமுக ஆட்சியில் கட்சிக்காரர்கள் அராஜகம் செய்யமாட்டார்கள் 

இதுவும் எவ்வளவு தூரம் சரி என்று எனக்கு தெரியாது ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட அளவுகடந்த அதிகாரம் எத்தனை பெண்களின் வாழக்கையை சிதைத்தது என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. 90களில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் தொடங்கி சமீபத்திய சிவகங்கை பெண் சீரழிப்பு வரை ஜெயாவின் காவல் துறை நடத்திய அட்டூழியங்களுக்கு அளவேயில்லை. இது இன்றுவரை தொடர்கிறது (ஜெயலலிதா ஆட்சியில்  காவல்துறைபோலீசு ஆட்சி) இந்த பதிவுகள் அதற்கு சாட்சி. மேலும் அரசியல்வாதிகள் அராஜகம் செய்தால் அவர்கள் மீண்டும் மக்களை தேடி வந்துதான் ஆகவேண்டும் ஆனால் போலிசு அராஜகம் செய்யும் போது அவர்களை தண்டிக்க பொதுமக்களிடம் என்ன வழி உள்ளது?  கட்சிகார்களின் அராஜகம் வெளிப்படையாகத் தெரியும். காவல் துறை அராஜகம் வெளியே தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தால் என்ன நடக்கும் என்று விசாரணை படம் பார்த்த பலருக்கும் புரிந்திருக்கும் . நீங்கள் இப்படிப்பட்ட ஆட்சியைத்தான் விரும்புகிறீர்களா? உங்களின் மனசாட்சியை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள் 

செலவழித்த மணித்துளிகளுக்கு நன்றியுடன் - நடராசன் 




வியாழன், 31 மார்ச், 2016

கேள்வி - பதில்

கேள்வி 1: அரசியல் திறனாய்வாளர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் சிலரும் விவாதங்களின் பொழுது திமுக வை விட அதிமுக வின் வாக்கு விகிதம் சுமார் ஐந்து சதவீதம் அதிகம் இருக்கும் என்று சொல்கிறார்களே அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

கேள்வி 2: எப்பொழுதும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி அதிமுக, இரண்டாவது தான் திமுக என்றால் மறுப்பீர்களா? உதாரணம் 2006ல் திமுக ஆட்சியை பிடித்த போதும் அதிமுக வாங்கிய வாக்கு சதவீதம் அதிகமாக இருந்ததே.

பதில் : அரசியல் திறனாய்வாளர்களுக்கு மூத்த பத்திரிக்கையாளர்களுக்கும் பதிலளிக்கும் அளவு நான் பெரிய ஆள் இல்லை. இருந்த போதும்   எனக்கு தெரிந்த சில விவரங்களை கூறுகிறேன். பதிலை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
1989 : திமுக - 33.2%, அதிமுக(ஜா + ஜெ ) - 31.4%, திமுக ஆட்சி 
1991 : திமுக - 22.5%, அதிமுக- 44.4%, அதிமுக ஆட்சி
1996 : திமுக - 42.07%, அதிமுக- 21.47%, திமுக ஆட்சி
2001 : திமுக - 30.9%, அதிமுக- 31.4%, அதிமுக ஆட்சி
2006 : திமுக - 26.5%, அதிமுக- 32.6%, திமுக ஆட்சி
2011 : திமுக - 22.4%, அதிமுக- 38.4, அதிமுக ஆட்சி

கடந்த 25 ஆண்டுகளில் நடந்த இந்த தேர்தல்களில் திமுக 22.4% முதல் 42.07% வரை வாக்கு சதவீதம் வாங்கியுள்ளது. அதேபோல் அதிமுக 21.47% முதல் 44.4% வரை வாக்கு சதவீதம் வாங்கியுள்ளது. ஆனால் எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் அதிமுகவுக்கு 5% வாக்குகள் அதிகம் என்கிறார்கள் என்று விளங்கவில்லை.  

புதன், 30 மார்ச், 2016

மதிமுக : திராவிட(ர்) இயக்கங்களின் வரமா சாபமா?

திராவிட(ர்) இயக்கங்கள் :


இந்த சொல் கடந்த 100 ஆண்டு தமிழகத்தின் வரலாறு. தமிழகத்தின் ஒவ்வொரு முன்னேற்றமும் இந்த இயக்கங்களால் என்பது மறுக்க முடியாத உண்மை. நீதிக்கட்சி தொடங்கி இன்றைய லட்சிய திமுக வரை "திராவிட" என்கிற பெயரோடு தான் இயங்குகின்றன. அவைகளில் பல அரசியல் இயக்கங்கள். அரசியல் அதிகாரத்தை பெற்று அதன் மூலம் திராவிட கொள்கைகளை நிறைவேற்றுவது இவர்களின் இலக்கு. இதன் அடிப்படையில் பார்த்தால் திமுக, மதிமுக தவிர்த்து மற்ற கட்சிகள் பெயரில் மட்டுமே திராவிடத்தை வைத்துள்ளன. இதில் மதிமுக வை உண்மையான திராவிட இயக்கமாக  இணைய வெளிகளில் கருணாநிதி எதிர்ப்பாளர்களால் முன்னிறுத்தப்படுகிறது.  அப்படியெனில் மதிமுக திராவிட கொள்கைகளை எவ்வாறு முன்னெடுத்து செல்கிறது என்பதை சீர் தூக்கி பார்ப்போம்.


மதிமுக உருவான பின்னணி:


ராஜீவ் கொலைக்கு பின் நடந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை கண்ட திமுகவுக்கு அடுத்த பேரிடியாக இறங்கியது திமுகவில் இருந்து மதிமுக பிரிந்த சம்பவம். இது நடந்தது 1993 ல். அதற்கு காரணமாக கூறப்பட்டது நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசின் உளவுத்துறை ஜெயலலிதா தலைமையிலான தமிழக காவல்துறைக்கு அனுப்பிய கடிதமும் அதைதொடர்ந்து நடந்த சம்பவங்களும்.   இந்த சம்பவம் நடந்த போது வைகோ திமுக வின் மாநிலங்களவை உறுப்பினர். அதாவது 1978 முதல் 1996 வரை தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் திமுக வின் உறுப்பினராக இருந்தார். அப்படி தொடர்ச்சியாக மூன்றாவது முறை உறுப்பினராக இருந்த போது மாநிலத்திலும் திமுக ஆட்சி, மத்தியிலும் 1989 - 1991 வரை திமுக கூட்டணியின் வி.பி. சிங் தலைமையிலான அரசு பொறுப்பில் இருந்தது. திமுக வுக்கும் விடுதலைபுலிகளுக்கும் புரிதல் ஏதும் இல்லா காலம் அது. திமுக டெலோ வை ஆதரித்தது எம்ஜியார் இறந்த பிறகு விடுதலை புலிகளுக்கு ஆதரவாக அதிமுக இல்லாத சூழல்அதுஇந்த காலகட்டத்தில் தான் கள்ளத்தோணி ஏறி வைகோ, இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்தார். அந்த சந்திப்பு கருணாநிதிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரும் சவாலை ஏற்படுத்தியது அதற்கு காரணம் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஒரு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் அடுத்த நாட்டின் எல்லைக்குள் கள்ளத்தோணி ஏறி செல்வது அரசியல் ரீதியாக எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது வைகோ வுக்கு தெரியாதது வியப்பே. அவரின் பயணம் இறுதி வரை கமுக்கமாக வைக்கப்பட்டு அவர் வன்னி சென்றதும் தான் கருணாநிதிக்கே(தன் நெஞ்சுகுழியில் உயிரிருக்கும் வரை கருணாநிதி தான் எல்லாம் என்று சொன்ன வைகோ) தெரியவந்தது. இது அரசியல் எதிரிகளால் மிகப்பெரும் புயலை கிளப்பி விட்டது. இதே காலகட்டத்தில் தான் விடுதலைப்புலிகள் நிகழ்த்திய பத்மநாபா படுகொலை, இந்திய ராணுவத்தை கலைஞர் வரவேற்காமை, வைகோவின் கள்ளத்தோணி பயணம் இவை அனைத்தும் சுப்ரமணிய சாமி, ஜெயலலிதா, ராஜீவ் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்து ராஜீவ் ஆதரவுடன் ஆட்சி அமைத்த சந்திரசேகரால் 1991 ஆட்சி கலைக்கப்பட்டது. இதில் கலைஞரின் செயல்பாடான இந்திய ராணுவத்தை வரவேற்காமை, எம் மக்களை கொன்று குவித்த படை என் நாட்டு படையாகினும் அதை வரவேற்க போகமாட்டேன் என்று சூளுரைத்தது ஒரு நேர்வழி போராட்டம். மற்ற இரண்டும்?


கொலைக்குற்றம் சாட்டப்பட்ட பின்னணி:  

வைகோ திமுகவை விட்டு வெளியேறிய/விலக்கப்பட்ட போதுநான் உயிரினும் மேலாக நினைத்த கருணாநிதியே என்னை சந்தேகப்பட்டு விட்டார் என்பதே வைகோ வின் குற்றசாட்டு  .
கருணாநிதி சந்தேகப்பட்டாரா? இல்லையா என்பதற்கு போகுமுன், வைகோ சந்தேகப்படும்படி நடந்தாரா இல்லையா என்பதுதான் கேள்வி
1.  மூன்றாவது முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்து ஓராண்டு கூட நிறைவடையாத சூழ்நிலையில், தலைவருக்கு தெரியாமல் கள்ளத்தோணி ஏறி இலங்கை சென்று பிரபாகரனை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?(டெசோ மூலம் வசூலித்த பணத்தை வாங்க மறுத்து திமுகவை அவமான படுத்திய விடுதலைபுலிகளின் தலைவரை, அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவர் கட்சியின் தலைவருக்கு தெரியாமல் சந்திக்க சென்றது ஏன்) 
2. இந்த பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வைகோவுக்கு பாதுகாப்பு அளித்த விடுதலைப்புலிகள்  சிலர் மரணமடைந்தனர். இவ்வளவு அபாயகரமான பயணம் மேற்கொள்ளும் நிர்பந்தம் வைகோ வுக்கும், விடுதலை புலிகளுக்கும் ஏற்பட்டது ஏன்?
3.இந்த பயணம் முடிந்து ஓராண்டிற்குள் ராஜீவ் காந்தி கொலை தமிழகத்தில் நிகழ்ந்தது. அதற்கு ஒரு வருடம் முன் பத்மநாபா கொலை நடந்தது. இந்த இரண்டும் விடுதலை புலிகளால் நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
4. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின், அதிமுக வுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உறவு அறுபட்ட நிலையில் திமுக வுடனும் பழைய கசப்புகளால் உறவை புதுபிக்க முடிய வில்லை.  எனவே திமுக வின் தலைவராக நமக்கு வேண்டப்பட்டவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று விடுதலை புலிகள் நினைத்திருக்கலாம்அதற்கு சரியான சந்தர்ப்பமாக1991 தோல்வியால் துவண்டு இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக  கருதி இருக்கலாம்.  
5. 1990 கள்ளத்தோணி பயணத்திற்கு பின் வைகோ கருணாநிதியை சந்தித்து சமாதானம் செய்திருந்தாலும் தொடர்ச்சியான நடவடிக்கைகள், சந்தேகம் கொள்ள வைத்திருக்கும். அதுவும் கருணாநிதி போன்ற அரசியல் தலைவருக்கு (எதிர்ப்பையே வாழ்நாள் முழுதும் சந்தித்து கொண்டிருக்கும் ஒருவருக்கு) சந்தேகம் வந்திருந்தாலும் அது நியாயமே.
6. எச்சரிக்கையை வெளியிட்டது நரசிம்ம ராவ் தலைமைலான அரசு. அந்த அறிக்கையை கையளித்தது ஜெயலலிதா தலைமையிலான அரசு. அவர்கள் கருணாநிதி பாதுகாப்பு குறித்து பொய்யான அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
7. இந்த அறிக்கை கிடைத்தவுடன் அதற்கு பொதுக்குழுவில் விளக்கம் அளிக்கும் படி வைகோ விடம்  வேண்டுகோள் விடுக்கப்பட்டது ஆனால் அதை மறுத்து அவர் போட்டி பொதுக்குழுவை கூட்டினார், அறிவாலயத்தை கைப்பற்ற முயன்றார் இறுதியில் கட்சியை கைப்பற்ற முயன்று தோல்விஅடைந்தார். இறுதியாக மதிமுக வை உருவாக்கினார்.


மதிமுக உருவான புதிதில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதா?

இன்றும் பல மதிமுக மற்றும் அனுதாபிகள் சொல்வது என்ன வென்றால் மதிமுக உருவானவுடன் திமுக தொண்டர்கள் பெருமளவில் வெளியேறி மதிமுக வில் இணைந்ததாக பரப்புரைகள் சொல்வதுண்டு அது எந்த அளவில் உண்மை? மேற்கண்ட கூற்றுக்கு ஆதாரமாக அவர்கள் குறிப்பிடுவது மதிமுக உருவாகி சிறிது காலத்தில் நடந்த பெருந்துறை சட்டமன்ற இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்ததை கூறுவார்கள்[அதுவும் தவறாக "திமுக" வை பின்னுக்கு தள்ளி என்று]. ஆனால் அதே அன்று நடந்த மயிலாப்பூர்  சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மதிமுக போட்டியிட்டது. அதை பற்றி யாரும் எங்கும் பேச மாட்டார்கள். அதற்கு காரணம்
 1. மயிலாப்பூரில் மதிமுக வின் பொருளாளரான[வைகோ வுக்கு அடுத்த இடம், தாயகம் கட்டிடத்தை வழங்கிய] கலைப்புலி எஸ்.தாணு போட்டியிட்டு நான்காம் இடம் பெற்று[காங்கிரசுக்கு அடுத்த இடம் ] வைப்புத்தொகை இழந்தார்.
2. உண்மையில் திமுக தொண்டர்கள் மதிமுகவை ஏற்று கொண்டதாக இருந்தால் அன்று திமுக கோட்டையாக விளங்கிய சென்னையில் இரண்டாம் இடம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அங்கு திமுக சார்பில் போட்டியிட்ட ராமஜயம் இரண்டாம் இடத்தை பெற்று  வைப்புத்தொகை திரும்ப பெற்றார். இதிலிருந்தே மதிமுக வினர் செய்வது பொய் பிரச்சாரம் என்று தெரியும்(2009 க்கு பின் அரசியல் தெரிந்தவர்கள் வேண்டுமானால் இதை ஏற்று கொள்ளலாம்).
3. சரி பெருந்துறையில்(பெருந்துறை தொகுதியின் வாக்காளன் நான். 1996 முதல் 2011 வரை அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்தவன் - 2004, 2009 தவிர) ஏன் இரண்டாம் இடம் பெற்றது என்பதையும் ஆராய்ந்து விடுவோம்


1. பெருந்துறையில் திமுக போட்டியிடவில்லை, 1991 பொதுத்தேர்தலில் .கம்யுனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதே .கம்யுனிஸ்ட் திமுக கூட்டணியில் தொடர்ந்ததால் கூட்டணி தர்ம அடிப்படையில் திமுக  ஆதரவுடன் .கம்யுனிஸ்ட் மீண்டும் போட்டியிட்டது. 1991 தேர்தலில் .கம்யுனிஸ்ட் பெற்ற வாக்குகள் சுமார் 22000. 1994 தேர்தலில் சுமார் 21000. மதிமுக சுமார் 25000.
2. மதிமுக பிளவுக்கு பின் திமுக வின் வாக்கு வங்கியில் சிறிது குறைந்தது உண்மை. அதற்கு காரணம்ஈரோடு திமுகவின் முகவரி போல்  விளங்கிய கணேசமூர்த்தி வைகோ வுடன் விலகிய 9 மாவட்ட செயலாளர்களுள் ஒருவர்.  அப்போது ஈரோடு திமுக வின் இரண்டாம் கட்ட தலைவர் என்று யாரும் செல்வாக்கு பெறவில்லை. சுப்புலட்சுமி ஜெகதீசன் சுமார் 1.5 ஆண்டு தடா சிறைவாசத்திற்கு பின் அப்போதுதான் வெளியே வந்திருந்தார். NKK.பெரியசாமி பெரிய அளவில் தொண்டர்களுடன் செல்வாக்கு பெற்று இருக்கவில்லை. எனவே அவர்களால் தொண்டர்களை ஒருங்கிணைத்து தேர்தல் பரப்புரை செய்ய இயலவில்லை. இருந்தபோதும் கணிசமான திமுக தொண்டர்கள் .கம்யுனிஸ்ட்  கட்சிக்கு வாக்களித்ததால் டெபொசிட் இழக்கவில்லை.
3. பெருந்துறை திமுக தொண்டர்களுக்கு எப்பொழுதும் தலைமை
மேல் சிறு வருத்தம்  உண்டு அது என்னவென்றால் எப்போதும் அந்த தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விடுவதால். அதனால் சிலர் மதிமுக வுக்கு சென்று விட்டு 1996ல்  மீண்டும் திரும்பி விட்டனர். 1994 ல் மதிமுக வாங்கிய வாக்குகளில் பெரும்பான்மையானவை தேர்தலுக்கு தேர்தல் மாற்றி வாக்களிப்பவர்கள். எனவே தான் 1994 ல், 25000 வாக்குகள் வாங்கிய மதிமுகவின் VM.கந்தசாமி, 1996 ல்  7800 வாக்குகள் பெற்றார்.
எனவே மதிமுகவை திமுக தொண்டர்கள் என்றைக்கும் திமுக தலைமைக்கு மாற்றாக கருதியதில்லை.
சரி, இப்பொழுது  மதிமுக அரசியல் கட்சியாக எப்படி நடைபோட்டு வந்துள்ளது என்பதை பார்ப்போம்.
மதிமுக தொடங்கியதுடன் அரசியல் முகப்பு வாக்கியமாக சொன்னது 
"அரசியலில் நேர்மை! பொதுவாழ்வில் தூய்மை! லட்சியத்தில் உறுதி!" இந்த வாக்கியங்களைத்தான். உண்மையாகவே அவர்கள் இதை கடைபிடிக்கிறார்களா?

அரசியலில் நேர்மை:

    இவ்வாறு சொன்ன அரசியல் கட்சி தான் 1995 ஆம் ஆண்டு ஊழல் மலிந்துவிட்டது என்று தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொண்டது. அதே கட்சி தான் மூன்றே ஆண்டுகளில் அதிமுகவுடன் 1998ல்  கூட்டணி வைத்தது. இதே போல் தான் இரண்டாம் முறையும் பாசிச ஜெயலலிதா ஆட்சி ஒழிக என்று கூக்குரல் இட்டுவிட்டு 2001-2006 ஆட்சி முடிய சில மாதங்கள் முன்புவரை அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப என்று கூறி மீண்டும் ஒருமுறை நடைபயணம் செய்த கட்சி 35 சீட்டுகள் கொடுக்கிறேன் என்று சொன்னதும் அன்பு சகோதரியின் ஆட்சி தொடர அதிமுக வுக்கு வாக்களியுங்கள் என்று சொன்ன நேர்மைக்கு சொந்தக்கார கட்சி.
2006 பிப்ரவரி வரை கலைஞர் 5 வது முறையாக பொறுப்பேற்க பாடுபடுவோம் என்று கூறிவிட்டு 2006 மார்ச்சில் சகோதரியின் ஆட்சி தொடர மதிமுக அயராது பாடுபடும் என்று அறிவித்த  நேர்மை மிக்க மிக்க கட்சி   
அது மட்டுமா கொலைப்பழி சுமத்தினார் என்று திமுக வை விட்டு வெளியேறி பின் 1999 மற்றும் 2004 இல் அதே கட்சி தலைமையில் இடம் பெற்ற கூட்டணியில் இடம்பெற்றதுடன் என் தொண்டைக்குழியில் உயிர் இருக்கும் வரை கலைஞரை எதிர்க்க மாட்டேன் என்று அறிவித்து அதன் படியே (?) இன்று வரி நடக்கும் நேர்மையான தலைவரை கொண்ட கட்சி அது.
இதுபோல் இன்னும் பல உதாரணங்கள் கட்சியின் நேர்மையை பாராட்டும்

அடுத்தது 'பொதுவாழ்வில் தூய்மை':

புலிகளிடமும்புலம் பெயர் தமிழர்களிடமும் பணம் பெற்றுக்கொண்டு கட்சி நடத்துவதாக சர்வதேச ஊடகமே தூய்மையை பற்றி பறைசாற்றியது. அது மட்டும் அல்ல உள்ளூர் ஊடகங்களும் 40 கோடியும்,35 சீட்டும் வாங்கிகொண்டு அணி மாறியது முதல் விகடனில் வெளியான புனிதவதி பேட்டி, நாஞ்சில் சம்பத் வெளியேறிய பின் அவர் கூறிய எந்த எந்த குற்றசாட்டுக்கும் பதில் அளிக்காமல் நடந்த நிகழ்வுகளை  மறப்போம் என்று கூறிய தூய்மையான கட்சி தான் மதிமுக
அடுத்தது 'லட்சியத்தில் உறுதி':
இதற்கும் பல உதாரணங்கள் உண்டு. அம்மையாரின் அடக்குமுறைக்கு பயந்து கொண்டு புலிகளுக்கும் மதிமுக வுக்கும் தொடர்பில்லை, புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு மதிமுக வில் இடம்  இல்லை என்ற ஈழ ஆதரவு நிலையில் உறுதியாய் இருந்த கட்சி அது
அதே போல் தான் திமுக, அதிமுக வுடன் கூட்டு இல்லை என்ற இலட்சியத்திலும், பாஜக வுக்கு வெண்சாமரம் வீசி திராவிட கொள்கைகளை காப்பாற்றும் லட்சியத்தில் உறுதி கொண்ட கட்சி
அது மட்டும் அல்ல சேது சமுத்திரம், கூடங்குளம் என அனைத்து பிரச்சினைகளிலும் அம்மையர் இவர்களுக்கு எதிராக களம் இறங்கும் வரை லட்சிய உறுதியோடு இருக்கும் கட்சி தான் மதிமுக   
என் சிற்றறிவுக்கு எட்டியவரை மதிமுக என்ற கட்சி எந்த வகையிலும் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளை விட வேறுபட்டதாக தெரிய வில்லை. மேலும் இந்த கட்சி திராவிட இயக்க கொள்கைகளை எந்த வகையிலும் பரப்பவில்லை அதை அழிக்கும் சக்திகளுக்கு கருணாநிதி எதிர்ப்பு என்ற ஒற்றை கொள்கைக்காக துணை போகும் இயக்கமாக தான் தெரிகிறது.
எனவே  என்னைப்பொருத்தவரை மதிமுக, திராவிட இயக்கத்தின் சாபமே.