வெள்ளி, 30 அக்டோபர், 2015

திராவிடம் Vs பொதுவுடைமை(கம்யுனிசம்)

கேள்வி 1: ஸ்டாலின் அரசியலில் காமெடி நடத்துகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?

கேள்வி 2: காங்கிரஸ்/பாஜக வின் பொருளாதார கொள்கைகளை பின்பற்றும் திமுக வுடன் கூட்டணி இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?

கேள்வி 3: கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகளும் திராவிட இயக்கத்தின் ஒன்று போல் எனக்கு தெரிகிறது, அப்புறம் எதற்கு பெரியார் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார்? - நண்பர் ஸ்ரீனிவாசன் கேட்ட கேள்வி.

பதில்கள்: மேலே உள்ள மூன்று கேள்விகளும் வேறு வேறாகத் தோன்றினாலும் மூன்றும் திராவிட/பொதுவுடைமை கட்சிகள் சார்ந்தது. எனவே மூன்றுக்கும் ஒன்றாக பதிலளிக்கிறேன்.
பதில் 1: தகர டப்பாவை கண்டுபிடிப்பதற்கு முன் உண்டியலை கண்டுபிடித்தவர்கள் என்று ஜெயலலிதாவால் ஏளனம் செய்யபட்ட பின்னரும் ஜெயலலிதாவை இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக ஏற்க சம்மதித்தும், இரண்டு தொகுதிகள் கொடுக்க முடியாது என்று வாயிற் கதவிலேயே நிறுத்தி திருப்பி அனுப்பியும், ஜெயலலிதா ஆர்.கே. நகர் தேர்தலில் நிற்கும் போது அவரை எதிர்த்தாக இவர்கள் செய்த நகைச்சுவையை விட ஸ்டாலின் ஒன்றும் பெரிதாக செய்துவிட முடியாது. அந்த தேர்தலில் தான் அமைதிப்படை   திரைப்படத்தில் வரும் நகைச்சுவையைபோல் வாக்கு சாவடியில் உள்ள மொத்த வாக்கை விட அதிகமான வாக்கு பதிவான நகைச்சுவையை மிஞ்ச முடியுமா? அந்த தேர்தலின் உச்ச பட்ச அத்துமீறலை, போராளிகள் என்று அறியப்படும் பொதுவுடைமை தோழர்கள் எதிர்கொண்ட விதம் எந்த ராகமோ தெரியவில்லை.  அது மட்டும் அல்ல இவர்களின் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் இறந்த பிறகு, இவர்களை கேட்காமலே ஜெயலலிதா தன் வேட்பாளரை நிறுத்தி அசிங்கப்படுத்திய பின்னும், 2014 தேர்தலில்  ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வைக்காக கையேந்தி நின்றவர்களுக்கு ஸ்டாலின் பயணம் நகைச்சுவையாகத்தான் இருக்கும்.

பதில் 2: இந்த கேள்வியை 2013 வரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திருமாவளவன், 2014 தேர்தலில் மோடியை ஊர் ஊராக விளம்பரம் செய்த வைகோ போன்ற தன் மக்கள் நல கூட்டமைப்பின் கூட்டாளிகளை கேட்க மறந்து விட்டாரா? இல்லை எனது கொள்கையும் காங்கிரஸ் கொள்கையும் வேறல்ல என்னும் வாசனுக்காகவும் இன்றும் பாஜக வுடன் கூட்டணியில் இருக்கும் விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கும்  போதும் மறந்து விடுகிறாரா? இல்லை 2014 தேர்தலில் தன் அணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க இருந்த ஜெயலலிதாவின் பொருளாதார கொள்கை தன் என்ன என்பதையும் ஜி.ரா அறிவிப்பாரா? அது மட்டும் அல்ல புதிய பொருளாதார கொள்கையின் சிற்பி மன்மோகன் சிங்கை ஆட்சியில் முதன்முதாலாக ஆட்சி கட்டிலில் அமர்த்தியதும் தாங்கள் தாம் என்பதையும் மறந்து விட்டார்களோ?

பதில் 3: இந்த கேள்விக்கு முதலில் என் நன்றிகள்.  பொதுவாக பொதுவுடைமை இயக்கங்கள் இடதுசாரி இயக்கங்கள் எனப்படும். அதாவது அதிகார வர்க்கத்திற்கு ஆதவாக இருப்பவர்களை வலது சாரிகள் என்றும் எதிராக இருப்பவர்கள் இடது சாரிகள் என்றும் அழைக்கபடுவார்கள்.
ஒருவர் அதிகார வர்க்கத்தில் இருப்பதும், ஒடுக்கபடுபவனாக இருப்பதிற்கும் அவனிடம் உள்ள பணம் மற்றும் பதவி தான் காரணம். இன்று அதிகாரத்தில் இருப்பவன் நாளை அதை இழந்து ஒடுக்கப்படுபவனாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. இது தான் உலக யதார்த்தம். ஆனால் இந்தியாவில் மட்டும் அதிகாரம் என்பது வருணம் சார்ந்தது. ஒரு தாழ்த்தப்பட்டவன் அதிகாரத்தை அடைவது என்பது அவ்வளவு எளிதில் நடக்காத ஒன்று. அதுவும் ஒவ்வொரு  சாதிக்கும் ஒவ்வொரு தொழில் என்று  கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகத்தில், ஒரு செருப்பு தைக்கும் ஒருவனின் மகன் அதிகாரத்திற்கு வருவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று.
இந்த வேறுபாடுகளை உள்வாங்காமல் சமநிலை என்பது சாத்தியமே அல்ல. அதுவும் வர்க்க பேதம் (ஏழை - பணக்காரன், முதலாளி - தொழிலாளி ) என்பது நிரந்தரமானது அல்ல. ஆனால் அதை விட கொடுமையானது வருண பேதம். ஒருவன் சூத்திரனாகவோ பஞ்சமானாகவோ பிறந்துவிட்டால் அவன் இறக்கும் வரை அதே வருணம் தான். அதை யாராலும் மாற்ற முடியாது.
பொதுவுடைமை கட்சிகளின் முதன்மையான நோக்கம் வர்க்க சமநிலை உருவாக்குவது
திராவிட இயக்கங்களின் முதன்மையான நோக்கம் வருண சமநிலை உருவாக்குவது  அதற்கு பெயர்தான் "சமூக நீதி". அது மட்டும் அல்ல பாலின சமநீதி உட்பட.

ஒரு உதாரணம். 2011 கணக்கின் படி இந்திய அரசு 149 அதிஉயர் (Top level IAS officers) அதிகாரிகளில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், முதன்மையான் 5 துறைகளில் ஒன்றாக கருதப்படும் தொலைத்தொடர்பு துறைக்கு ஒரு தாழ்த்தப்பட்டவரை காபினெட் அமைச்சராக நியமித்தது திராவிட இயக்க சாதனைகளில் ஒன்று. எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும், அதிகாரத்திலிருக்கும் ஆச்சாரிகளாலும், ஜோஷி களாலும் , ராய் களாலும் இன்னும் பல அதிகார மையங்களாலும் உட்செரித்துக்கொள்ள முடியவில்லை. அதன் பயனைத்தான் திமுக இன்றுவரை அறுவடை செய்துவருகிறது. என்ன காரணத்திற்காக இந்த அதிகார வர்க்கத்தால் இந்த திராவிட இயக்கம் பழிவாங்கப்படுகிறதோ அதே காரணத்திற்காக அந்த இயக்கத்தின் பின் நிற்பதை சமூகநீதியின் பால் நம்பிக்கை கொண்ட அனைவரும் தலையாய கடமையாக கொள்ளவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
நீங்கள் செலவழித்த மணித்துளிகளுக்கு மிக்க நன்றி.